மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே!!!
வளர்ச்சியடைந்தும் வரும் நாடான இலங்கையின் 2032ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சரான
"Ching Hong" ஆகிய நான் உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இந்த முறை வித்தியாசமான விதத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் என்னென்ன அபிவிருத்திகளை செய்யலாமென திட்டமிட்டுள்ளோம் என்பதை வரிசைக்கிரமமாக சொல்லலாம் என எண்ணுகிறேன்... அந்த வகையில் முதலாவதாக புத்தளத்தை நோக்குவோமாயின்... (முகத்தில் ஓர் ஏளனச்சிரிப்புடன்)
• ஆரம்பமே சகாதாரத்துறையில் சந்தோஷமான செய்தியொன்றுடன் ஆரம்பிக்கிறேன் சபாநாயகர் அவர்களே! , சூழல் பாதிப்புக்களால் சுவாசப்பிரச்சினைக்குள்ளாகிஇருக்கும் புத்தள மக்களுக்கு இலவச Oxygen Boothகளை வழங்குவதற்காக 600 மில்லியன் ரூபாய்களை China அரசு கடனாக வழங்கியுள்ளது. எப்பொழுதும் இந்த அரசு மக்களின் நலன் கருதியே செயற்படும் என்பதற்கு இது ஒரு ஆணித்தரமான எடுத்துகாட்டு சபாநாயகர் அவர்களே!!!(பெருமிதத்துடன் சுற்றிப்பார்க்கிறார். அனைத்து அமைச்சர்களும் ஆதரவளித்து மேசையில் தட்டுகின்றனர்).
• அடுத்ததாக அவைத்தலைவர் அவர்களே! கல்வித்துறைக்கு செல்லலாம் என எண்ணுகிறேன். புத்தளம் பிரதேசத்தில் ஊனமுற்றகுழந்தைகளை போல் ஒரு சில தேக ஆரோக்கியமுள்ள பிள்ளைகளும் பிறப்பதால் அனைத்து பாடசாலைகளிலும் தேக ஆரோக்கியமான பிள்ளைகளுக்கென தனிப்பிரிவு ஒன்றை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக ஒதுக்கப்படும் தொகை 726 மில்லியன் ரூபாய்கள்.
• மேலும், கௌரவத்திற்குரிய சபாநாயகர் அவர்களே! புத்தளம் அனல்மின்சாரத்தின் வினைத்திறனை அதிகரிக்கும் முகமாக தற்போது அனல்மின்சாரம் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள கைவிடப்பட்ட விவசாய நிலங்களை வாங்கி மேலும் 5 உலைகளை அமைக்க தீர்மானித்துள்ளோம். இதற்காக 2600 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.
• அடுத்ததாக சபாநாயகர் அவர்களே! அறுவைக்காலுவிற்கு குப்பை கொண்டு போகும் வண்டிகளால் தமது ஊர் முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக அந்த பாதையில் உள்ள மக்கள் புகாரளித்துள்ள நிலையில் அவர்களுக்கு இலவசமாக "Nose Mask" வழங்குவதற்காக 550 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கௌரவத்திற்குரிய சபாநாயகர் அவர்களே மீண்டும் மீண்டும் நாங்கள் சொல்வது என்னவெனில் மக்களுக்காகவே நாம் மக்காளாலேயே நாம் என்பதேவாகும்.
• அடுத்து, தொழிற்சாலை நகரமான புத்தளத்தில் அடிக்கடி குப்பை வண்டிகளும், நிலக்கரி மற்றும் சுண்ணக்கல் ரயில்களும், சென்று வருவதால் ஊர் கடும் இரைச்சலுக்குள்ளாகி பலருக்கு செவிப்புலம் அற்றுப்போய் இருப்பதாக அப்பிரதேச மக்கள் அளித்த மனுவை வாசித்த பின் கண்கலங்கியவனாய், அவர்கள் இனியும் துன்பப்படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இலவசமாக செவிட்டு Machineகளும், பஞ்சுகளும் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்கிறோம். (வாசித்து முடிந்ததும் வாயில் தவழும் அந்த பெருமிதப்புன்னகையை காண கண்கோடி வேண்டும்.)
• மேலும் சபாநாயகர் அவர்களே! இலங்கை அரசின் வருமானத்தை அதிகரிக்கும் முகமாக Singapore, Malaysia, வரிசையில் China அரசாங்கமமும் தமது குப்பைகளை அறுவைக்காலுவில் தட்ட முன் வந்துள்ளது. இதன் மூலமும் அரசிற்கு 2000 மில்லியன் ரூபா வருட வருமானமாக வசூலிக்கப்படவுள்ளது. இதன் மூலம் விளங்குவது யாதெனில் கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த அரசாங்கம் தனது, திறை சேரியை நிறப்பிக்கொள்ளுவதிலும் கவனம் செலுத்துகிறதென்பதேயாகும்.
• அடுத்ததாக கௌரவ சபாநாயகர் அவர்களே! ஜனாதிபதி "Shang Chang" அவர்கள் இந்த நாட்டின் மின்சாரப்பிரச்சினையை அனல்மின்சாரத்தினால் மட்டும் தீர்க்க முடியாது என அறிந்து எப்படியாவது இதை தீர்த்துத்தரும்படி China ஜனாதிபதியிடம் வேண்டியதிற்கிணங்க China அரசாங்கத்தினால் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அணு உலை ஒன்று புத்தளத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2018ல் அரச உடமையாக்கப்பட்ட 1000 ஏக்கர் உப்பளப் பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக China அரசாங்கம் 10,000 மில்லியன் ரூபாய்களை செலவிட முன்வந்துள்ளது. மின்சாரப் பிரச்சினைக்கு விடிவுகாலம் பிறந்தாயிற்று.. சபாநாயகர் அவர்களே!!.. , இதுவும் எமது அரசால் மேற்கொள்ளப்பட்ட சாதனை முயற்சிகளில் ஒன்றே என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை சபாநாயகர் அவர்களே!!!!
( தேகங்களை எரிக்கும் திட்டங்களுடன் தேனீர் இடைவேளைக்காய் சபை கலைகிறது)
- Muadh Malik -
2019.03.06
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.