முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன்கருதி பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதே எமது நிரந்தரப் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக அமையும் எனவும் இன்றைய காலத்தைப் பொறுவத்தவரையிலும் எங்களுடைய அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானதாகுமென்று முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் தபால்துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால்துறை அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உடுநுவர மற்றும் யட்டிநுவர ஆகிய இரு தேர்தல் தொகுதிகளை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட நடமாடும் சேவை கடந்த சனிக்கிழமை தவுலகல வஹங்கே அல்-அறபா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,
இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைப் பற்றி ஒரு சரியான கவனத்தை கொண்டதாகத் தெரியவில்லை. ஆரம்ப காலங்களில் இதற்கு அமைச்சர்களாக எம். எச். முஹமட், எம். எச். எம். அஷ்ரப், அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். அஸ்வர், அதைத் தொடர்ந்து சில சிங்கள அமைச்சர்மார்களின் கீழ் செயற்பட்டு வந்தது. அந்தந்தக் காலங்களில் சூழல் தேவைக்கேற்ப செயற்பட்டது. எனினும், அக்கால கட்டத்தையும் இக்கால கட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மீது பாரிய பொறுப்பிருக்கிறது.
இந்நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழக்கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமை இருக்கிறது. எனவே இன்றைய காலத்தைப் பொறுத்தவரையிலும் நாங்கள் எங்களுடைய அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மிகவும் சிறிய இடத்தில் அமைந்திருந்தது. இதனை விஸ்தரித்து பெரிய கட்டிடத் தொகுதியில் நிர்மாணித்து அதை மாற்றியமைத்துள்ளோம். இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கதைத்த போது அவர் 296 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கி அமைச்சின் கட்டிடத் தொகுதியை நிர்மாணித்து திறந்து வைக்கும்படி கூறினார். அந்த வகையில் அதற்குரிய கட்டிடத்தில் முஸ்லிம் சமய கலாசார அமைச்சு இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் அக்குறணை பிரதேசத்திற்கு அடுத்தததாக உடுநுவரப் பிரதேசம் திகழ்கிறது. அன்றைய காலகட்டத்தில் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அலுவலகம் வந்தபோது இடவசதியின்மை அன்று காணப்பட்டது. ஆனால் அந்த நிலைமை மாறி இன்று ஒரு அழகிய தோற்றத்திலுள்ள கட்டிடத்தில் எமது சகல அலுவலக வேலைகளை செய்து கொண்டிருக்கின்றோம்.
கடந்த காலங்களிலே எமது பள்ளிவாசல்கள் பல்வேறு இடங்களிலும் தாக்கப்பட்டன. அப்போது நாங்கள் சொந்த நாட்டில் அநாதைகளாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். இறைவனைத் தவிர எம்மைப் பாதுகாப்பதற்கு இந்நாட்டில் ஆட்சியாளர்கள் எவரும் இருக்க வில்லை. எமக்கு உதவ எவரும் முன்வரவும் இல்லை. இப்படியான ஓர் இக்கட்டான சூழ்நிலையிலேயே வாழ்ந்திருந்தோம். கடைசியாக நீதி கேட்டு நீதிமன்றம் சென்ற போது அன்று நீதிமன்றங்களிலே எங்களைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசலா என்பதாகும். துரதிஷ்டவசமாக அநேகமான பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இந்த அவல நிலையைக் கருத்திற் கொண்டுதான் பள்ளிவாசல்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டுமென வலியுறுத்திக் கூறி வருகின்றேன். பள்ளிவாசல்கள் மட்டுமல்ல குர்ஆன் மத்ரஸாக்கள், தைக்காப் பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள் ஆகிய அனைத்தையும் நாங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அக்கால கட்டத்தில் பள்ளிவாசல்கள் பதிவு செய்வதில் பல சிரமங்கள் இருந்தன. அப்போது பள்ளிவாசல்கள் பதிவு செய்வதாக இருந்தால் பலவிதமான ஆணவங்கள் கோரப்பட்டன. விசேடமாக அருகிலுள்ள பௌத்த விஹாரையின் கடிதம் அப்போது தேவைப்பட்டது. இப்படி பள்ளிவாசல் பதிவு செய்வதாக இருந்தால் பலவிதமான ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். இவை அனைத்தையும் நீக்கி மிக இலகுவான முறையில் அந்தப் பள்ளிவாசலுக்குரிய காணி உறுதியிருந்தால் மட்டும் போதுமென்ற வகையில் பள்ளிவாசல்களை பதிவு செய்வதற்கு விசேடமான சலுகையினை வழங்கி ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். ஆனால் எமது சமூகம் இதனைப் பெரியளவில் கவனத்தில் கொள்வதில்லை என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர். 25 புதிய பள்ளிவாசல்கள் பதிவு செய்யவும், 14 புதிய நிர்வாகத் தெரிவை பதிவு செய்யவும், 3 பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.