ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நிச்சயித்திருக்க அதை பொறாமை கொண்டும் பொறுக்காமலும் உடைத்து திரியும் முடிச்சு மாற்றிகள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக.
இன்றைய காலத்தில் திருமணம் ஒன்றை செய்யும் போது அதற்காக பொறுத்தமான மணமகளை தேடுவதற்கும்,தனது மகளுக்கு பொறுத்தமான மணமகனை தேடுவதற்கும் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் படுகின்ற பாடு பெறும்பாடாகும்.
எல்லா பெற்றோர்களும் எல்லா பாதுகாவலர்களும் தங்களது பிள்ளை வாழப்போகின்ற கணவனுடனும் மனைவியுடனும் சந்தோசமாக மகிழ்ச்சியாக பிரச்சினைகள் ஏதுமின்றி வாழ வேண்டும் என்பதையே ஆசை வைப்பார்கள் ஆதரவும் வைப்பார்கள்.
ஏதோ அடிப்படையில் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தம்பதிகளின் வாழ்க்கையில் விளையாடி அவர்களை பிரிப்பதற்கும் அந்த கல்யாணத்தை உடைப்பதற்கும் அரும்பாடு படும் சில உறுப்படியற்றவர்கள் கேடுகெட்டவர்கள் குறித்தே கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
எல்லா பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுக்கு சரியான துணையை தேடுவதில் மிகவும் அக்கறையுடையவர்களாக இருக்கின்றனர் இதில் மணமகன் ஒன்றை தேடும் போது அவன் எவ்வித கெட்ட பாவனைகளும் இல்லாதிருக்க வேண்டும்,சரியான தொழில் ஒன்று காணப்பட வேண்டும்,சமூக அந்தஸ்து காணப்பட வேண்டும்,நன்நடத்தை உடையவராக காணப்பட வேண்டும்,மார்க்கப்பற்று இருக்க வேண்டும் ,கெட்ட நண்பர்கள் இல்லாதிருக்க வேண்டும்,தேவையற்ற வழிச்சண்டைகளில் சிக்காதிருக்க வேண்டும் இப்படி பலவாறான குணநலன்களையும் தன்மைகளையும் பார்க்கிறார்கள்.
அதேபோல் தான் பெண் ஒன்றை தேடும் போது வயதுப்பொறுத்தம்,அழகு,படிப்பு,மார்க்கப்பற்று,பிற ஆடவர்களோடு தொடர்பு இருக்கிறதா எனப்பார்ப்பது,ஒழுக்கம் மற்றும் நன்நடத்தை,அடக்கம் மற்றும் பணிவு,தொழில் ,தொழில் சூழல் போன்ற பல் வேறு காரணிகளும் இதற்காக பார்க்கப்படுகின்றது.
ஏதோ அடிப்படையில் இந்த ஜோடிகளை பொறுத்தப்படுத்தி திருமண பேச்சு வார்த்தை நிச்சயிக்கப்பட்ட பிறகு நம்மில் சில சகோதரர்கள் இந்த திருமண நிச்சயத்தால் மனம் நிறைவு கொள்பவர்களாக இல்லை தமக்கு அவ்வாறான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கவில்லையே நல்ல ஜோடிப்பொறுத்தம் தமது பிள்ளைகளுக்கு அமையவில்லையே என்று பொறுமுவார்கள்,இதனால் தனக்கு கிடைக்காத நலவு அடுத்தவர்களுக்கும் கிடைக்க கூடாது,அல்லது இந்த திருமண நிச்சயத்தால் அந்த குடும்பம் உயர்வதை அனுமதிக்க கூடாது என்ற பொறாமையின் காரணமாக இப்படியான நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எப்படியாவது முறித்துவிட முயற்சி செய்கிறார்கள்.
இதற்காக இரவு பகலாக திட்டம் போடுவார்கள் போதாக்குறைக்கு தமது மனைவியையும் இதற்காக கூட்டணி சேர்த்துக்கொள்வார்கள் யாரை வைத்து சில தப்பான பொய்யான விடயங்களை கெட்டி உரிய குடும்பத்தவர்களின் காதில் இவற்றை சொல்ல முடியுமோ அத்தகையவர்களை தேடி குறித்த மணமகன் வீட்டாரிடம் அல்லது மணமகள் வீட்டாரிடம் தமது வயிற்றெரிச்சல்களையும் இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளையும் சொல்லி தமது வாதங்களை நியாயப்படுத்த ஆங்காங்கே நடத்த சில சம்பவங்களை தொடர்பு படுத்தி உண்மை போல் காட்டுவார்கள்.இவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை போல் இருக்கும் அதை அப்படியே கேட்டவர் குறித்த மணமகன் அல்லது மணமகளின் வீட்டுக்கு அல்லது தொழில் புரியும் இடத்திற்கு அருகாமையில் உள்ள குறித்த குடும்பத்தவர்களை தெரிந்த நண்பர்களிடம் சொல்வார்கள் அங்கேயும் இதேபோன்ற வேலை பார்க்கும் கேடுகெட்டவர்கள் உரிய வீட்டாரிடம் இந்த வதந்தியை கச்சிதமாக கொண்டு போய் சேர்ப்பார்கள்.
பின்னர் குறித்த மணமகன் அல்லது மணமகளின் வீட்டாரிடம் சந்தேகம் எழுகிறது எதற்கும் தேடிப்பார்க்க வேண்டும் என்று துடிதுடித்து சம்பவம் தொடர்பில் ஆராய பதறுவார்கள் தமது சந்தேகங்களை உரிய குடும்பத்தாரிடம் நேரடியாக முறையாக விசாரித்தறிந்து கொள்பவர்கள் இது பொறாமைக்காரர்களின் சூழ்ச்சி என்பதை கண்டு கொள்வார்கள்.ஆனால் முறையான விசாரணையை நேரடியாக அனுகி கேட்காதவர்களும் ,தன்னிடம் ஒன்றுக்கு மேற்பட்டோர் சொன்னதையும் வைத்து நம்பிவிடுவதால் அந்த வீட்டார் உடனடி முடிவுக்கு சென்று திருமண நிச்சயத்தை முறித்துக்கொள்வார்கள்.இது மிக ஆபத்தான நிலைமையாகும்.உண்மையில் அவர்கள் தீர்மானம் எடுத்த காரணம் விடயம் உண்மைதானா ? என்பதை ஆராய்வதற்கோ ,இது பற்றி தேடிப்பார்ப்பதற்கோ இவர்கள் தவறி விடுகின்றனர்.இதனால் தமது குடும்பத்துக்கு வரும் நல்ல வாய்ப்புக்களைக்கூட தட்டி விடுகிறார்கள்.இவ்வாறான நிலைமை மூலம் சந்தோசப்படுபவர்களோ,திருப்தியடைகின்றவர்களோ உங்களின் உண்மையான உறவுகளாகவோ,நண்பர்களாகவோ இருக்க மாட்டார்கள் ஆனால் வெளிப்பார்வையில் அவர்களே உங்களுக்கு உயிரை விட்டு உதவ தயாரானவர்கள் போல காட்டிக்கொள்வார்கள்.
ஆனால் இத்தகைய பசுத்தோல் போர்த்திய கெட்டவர்களை உங்களால் இனம்காண முடியாமல் போகும் எனவே உங்களை சூழ இருப்பவர்களையும் உங்களுக்கு செய்திகளை கொண்டு வந்து தருபவர்கள் யார் ?அத்தகையவர்கள் நம்மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களா? உண்மையான பாசத்தில் தான் இத்தகைய செய்திகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பவர்களா ?என்பதை கட்டாயம் ஒவ்வொரு பெற்றோரும்,ஒவ்வொரு பாதுகாவலனும்,திருமண பந்தத்தில் இணையும் இளைஞர் யுவதிகளும் அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.இல்லாவிட்டால் உங்கள் குடும்ப முன்னேற்றத்துக்கோ,நல்ல திருமண ஜோடிப்பொறுத்தத்துக்கோ தடையானவர்கள் வெகு தூரத்தில் அன்றி மிக அருகாமையிலேயே இருக்கிறார்கள் என்பதை காலம் கடந்த பின்னர் தான் உணர்ந்து வருத்தப்பட வேண்டியிருக்கும்.
அடுத்ததகாக திருமணம் பேசும் போது நன்கு தீர விசாரிக்க வேண்டியதும் முக்கியமாகும் .ஒரு விடயத்தை தீர விசாரிப்பது என்பதற்காக கண்ட கேட்டவர்களிடம் எல்லாம் விசாரித்து முடிவு எடுப்பதும் ஆபத்தானது.யாரிடம் விசாரித்தால் உண்மைத்தகவல்களை அறிய முடியும்,யாரைப்பிடித்தால் உண்மையான விடயங்களை வஞ்சகமில்லாமல் கேட்டறிய முடியும் என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியது முக்கியமாகும்.
எனவே விசாரித்தறிவதிலும் செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பதிலும் இரண்டு வகை மனிதர்கள் உள்ளனனர்.
1.தமது குடும்பம் சிறப்பாக வாழவேண்டும் அதற்கு சிறப்பான ஜோடிப்பொறுத்தம் வேண்டும் தகுதியானவராக இருக்க வேண்டும் எனப்பார்த்து நல்லெண்ணம் கொண்டு உண்மைக்கு உண்மையாக உதவ முன்வருபவர்கள்.
2.எமது குடும்ப முன்னேற்றத்திலோ,திருமண பந்தத்தில் நல்ல விஷயம் நடைபெறக்கூடாது நல்லாக வாழக்கூடாது வாழவிடவும் கூடாது என்பதற்காக என்ன என்ன வழிகளில் பொய்களையும் புரட்டுக்களையும் சொல்லி அந்த திருமண நிச்சயத்தை பிரிக்க பார்க்கிறார்களோ இத்தகைய கெட்ட எண்ணம் கொண்ட கேடுகெட்டவர்கள்.
எனவே நம்மைச்சூழ இருப்பவர்களும் நமக்கு செய்திகளை கொண்டு வருபவர்களிலும் மேற்சொன்ன இரு வகை மனிதர்களில் யார் என்பதை முதலில் சரிவர அறிந்தாலே இது விடயத்தில் வரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து முறையான தீர்மானத்தை எடுக்க முடியும் .கண்ட நிண்டவர்கள் சொல்வதற்காக தீர்மானம் எடுக்க முற்பட்டால் தமது முன்னேற்றத்தை தமக்கு வரும் நற்பாக்கியங்களை தாமே காலால் உதைத்தெறிவதைப்போன்று இருக்கும்.இது தனது அழிவை தானே தேடிக்கொள்வதற்கு ஒப்பானதாகும்.
அல்லாஹ் நாடினால் தான் எத்தகைய திருமண நிச்சயமாக இருப்பினும் அது திருமணம் வரை செல்லும் அதற்காக இதை சொல்லிச்சொல்லியே நடைபெறக்கூடிய திருமணத்தை பொறாமைக்காரர்களின் பேச்சை நம்பி உடைத்து விட்டு பார்த்தீர்களா இந்த விடயத்தை அல்லாஹ் நாடியிருக்கவில்லை என்று முழுக்குற்றத்தையும் அவனில் போடுவது எந்த வகையில் நியாயமாகும்? எந்த வகையில் சரியாகும்? மனிதர்கள் தங்களின் கரங்களால் தேடிக்கொள்வதற்கு அல்லாஹ் பொறுப்பேற்க மாட்டான் எனும் தத்துவத்தை விளங்கி நடப்பது அத்தியாவசியமாகும்.
சில திருமணங்கள் நீண்ட காலமாக பேசி வைப்பதாலும் இத்தகைய விபரீதங்கள் நடைபெறுகின்றன.
இதில் சைத்தானின் சூழ்ச்சியும் சேர்ந்தே காணப்படுகின்றது.அவன் எப்போதும் மனிதர்களுக்கு நலவை நாடுபவனல்லன் அவன் நல்ல ஜோடிகளையும் தம்பதிகளையும் பிரிப்பதற்கே சதாவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறான்.எனவே இத்தகைய கேடு கெட்டவர்களினூடாக சைத்தான் இந்த விடயத்தை செய்வதற்கு தீவிர முனைப்புடன் செயல்படுவான்.எனவே சைத்தானின் வலைக்குள் சிக்கித்தவித்து வாழ்க்கையை நாசம் செய்து கொள்ளாமலும்,கேடு கெட்டவர்களின் பேச்சுக்களை கேட்டு நல்ல திருமண நிச்சயங்களை முறித்துக்கொள்ளாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.இத்தகைய மனிதர்களில் நலவை விரும்பாத நல்ல ஜோடிப்பொறுத்தங்களையுடைய நிச்சயப்படுத்தல்களை பொறுத்துக்கொள்ளாமல் பொறாமை கொண்டு இல்லாத பொல்லாத விடயங்களை சொல்லி குத்திவிட்டு திருமணத்தை முறிக்கும் கேடுகெட்டவர்களே இப்படி நீங்கள் அடுத்தவர்களின் குடும்பத்தில் மண்ணை அள்ளிப்போட்டால் நாளை உங்கள் குடும்பத்துக்கும் மண்ணை அள்ளிப்போடுபவர்களை அல்லாஹ் ஏற்படுத்த மாட்டான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
அல்லாஹ்வைப்பயந்து இனிமேலாவது இத்தகைய சமூக குடும்ப நாசகார வேலை செய்வதை விட்டு விடுங்கள் இதையெல்லாம் தாண்டி குடும்பங்களை பிரித்து திருமணங்களை முறிப்பவர்களாக நீங்கள் இருப்பீர்களேயானால் அல்லாஹ்வின் சாபம் உங்களுக்கு உண்டாகிவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தம்பதிகளினதும் பெற்றோர்களினதும் கண்ணீரினால் நிச்சயமாக உங்களுக்கும் உங்கள் குடும்பங்களும் நாசம் ஏற்படப்போகின்றது என்பதையும் விளங்கி அத்தகைய கேடுகெட்ட வேலைகளில் இருந்து தூர விலகி இருப்பதற்கும் நல்ல விடயங்களை நல்லெண்ணத்தின் அடிப்படையில் சேர்த்து வைத்து அதன் மூலம் அதிகமான நன்மைகளை அடைந்து கொள்வதற்கும் வல்லவன் அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாகவும் ஆமீன்.
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்
08.03.2019.
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.